Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, December 28, 2010

என்னுள் நீ

இருளை கிழித்த
ஒளி..
கரும் பாறையினுள்
நீர்..
சுடும் பாலையினுள்
சோலை..
இறுதி முடிவினில்
துவக்கம்..

Monday, December 27, 2010

நீ

தீபத்தின்
ஒளியில்
உன்னை கண்டேன்.
விட்டில் பூச்சியாய்
நான்!

சிகப்பு விளக்கு



இங்கு

காமம்

மலிவாக

கிடைக்கும்!

இலவசமாக

உயிர்க்கொள்ளி

நோய்.......

விந்தை

புற்களின்
சீதனம்,
சூரியனுக்காக.
பனித்துளி!

காலை

விடியலை
வெண்பட்டு
போற்றி
வரவேற்றது,
மார்கழி மாதம்.

முடிவு

உடையப்போவது தெரியாமல்
ஆயிரம்
ஆசைகளோடு
என்னைப் போல்
வேகமாய்
நகர்கிறது,
நீர்க்குமிழி!

எத்தனை நேரம்?

தனக்கு அளிக்கப்பட
மகுடம் என்று,
என்னை
போல்
நிமிர்ந்து நிற்கிறது
புற்கள்.
மகுடமாய் பனித்துளிகள்!

கவனியுங்கள்!



"என்னை உபயோகப்படுத்துங்கள்"

என்று

தன்னில் எழுதிக்கொண்டிருக்கிறது

குப்பைத் தொட்டி.

கவனியுங்கள்!

பயன்படுத்துங்கள்..........

Friday, December 24, 2010

புகைப்படம் [சிறுகதை - 5]

இரவு இருள் சூழ்திருன்தது. சிவாக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. படுக்கையில் இருந்து எழும்பினான். மணி பின்னிரவு இரண்டேமுக்கால் ஆகி இருந்தது. தலையணை அருகில் இருந்த வெண்சுருட்டை தீப்பெட்டியுடன் எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தான். அவனுடைய இல்லம் பத்தாம் மாடியில் இருந்ததால் நகரத்தின் இரவு அழகை விளக்கொளியில் ரசித்துக்கொண்டே வெண்சுருட்டை முகர்ந்து உதடுகளின் நடுவே வைத்து பற்ற வைத்தான்.

இரண்டு முறை புகையை வெளியே ஊதியவனின் சிந்தனையில், என்று தான் நாம் புகைப்படக்கருவி வாங்க போகின்றமோ? என்ற கேள்வி உதித்த வண்ணம் இருந்தது. புகைப்படக்கருவி வாங்குவதற்காக வைத்திருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை தன் நண்பனுடைய அவசர தேவைக்காக கொடுத்து ஆறு மாதம் கடந்துவிட்டதை எண்ணி வருந்தினான்.

வீட்டில் மீண்டும் பணம் கேட்ட பொழுது, முதலில் கொடுத்ததை பற்றி அவர்கள் திருப்பி கேட்டு, "உன் நண்பர்களே இப்படி தான், என்று தன் பெற்றோர் அவன் நட்ப்பினையும் நண்பர்களும் கேலி செய்தது நினைவுக்கு வந்தது. அதனால் வீட்டில் இருந்து கூட உதவி கிடைக்காது என்று வருத்தத்தில் மீண்டும் ஒரு முறை புகையினை உள்ளிழுத்து வெளியேற்றினான். நகரமே விளக்கொளில் மின்ன தன்னுடைய வாழ்க்கை மட்டும் இருண்டு விடுமோ என்ற கலக்கத்தில் மீண்டும் மிச்சமிருந்த வெண்சுருட்டை முடித்தான். அவனுடைய தொண்டை வறண்டு போனதை உணர்ந்து பானையிலிருந்து மூன்று குவளை தண்ணீர் அருந்தி விட்டு தன்னுடைய பாயில் தலை சாய்த்தான் சிவா.

கடற்கரையில் தன்னுடைய புகைப்படகருவியுடன் சென்ற அவனுடைய கண்களுக்கு விருந்தாக இருந்தது. காலை கதிரவன் அதனுடைய செந்நிற கீற்றை வானத்தில் பூசியும், கடலில் தெளித்தும் இருந்தது. அக்காட்சி அவனுடைய மனதை வருடியது. தன்னுடைய கருவியில் பல கோணங்களில் பதிவு செய்தான். அப்பொழுது பறவைகளின் இனிமையான குரல் அவன் காதில் கேட்டு நிமிர, மேலே நூற்றுக்கணக்கான பறவைகள் சத்தத்தை எழுப்பி கொண்டு சிறகு விரித்து பறந்துகொண்டிருந்தன. ஆஹா! என்று கூறிக்கொண்டு அதையும் பதிவு செய்துகொண்டான். சற்று பின்னே போய் அப்பறவைகளுடன் சிகப்பு சூரியனையும் சேர்த்து பதிவு செய்து கொண்டான். அப்பொழுது அவன் மனம் எங்கோ பறக்கத் தான் செய்தது. இருக்காதா? வெகு நாட்கள் அவன் நினைத்ததை, நடத்திக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் கடலோடு கலக்கும் சிற்றாறை பார்த்தான். சத்தமில்லாமல் அது கடலோடு சங்கமித்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றில், ஒரு சிறிய ஓடத்தில் மீனவன் ஒருவன் தனியாக மீன்களை தன் வயிற்ருப் பசிக்காக வலை வீசி கொண்டிருப்பதைப் பார்த்த சிவா, அவன் வலை வீசுவதையும், மீண்டும் ஓடத்தினுள் இழுப்பதையும் பதிவு செய்து கொள்கிறான். தனக்கு பிடித்தமான காட்ச்சிகளை எல்லாம் படம் பிடித்துக்கொண்டு வீட்டினுள் புகுந்து தன்னுடைய கண்ணினியில் பதிவேற்றினான். பின்பு ஒவ்வொன்றாக பார்த்தான். படங்கள் அனைத்தும் அருமையாக அமைந்துவிட, ஆனந்தத்தில் தன்னுடைய இருக்கைகளிளையும் உயர்த்தி அவன் மகிழ்கையில் கை இடறி புகைப்படக்கருவி கீழே விழுந்தது. ஐயோ! என்று பதறி எழுந்தான். அருகில் இருந்த பானை உடைந்திருந்தது. அடடா, இது கனவு என்று நினைத்துகொண்டு படுக்கையில் இருந்து எழும்பினான். நேரம் ஆறரை என்று கடிகாரத்தில் காண்பித்தது.

காலைகடன்களை முடித்துக்கொண்டு காலனியை மாட்டிக்கொண்டு காலை நடைப் பயிற்சிக்கு விரைந்தான். அவன் தினமும் நடை பழகும் இடமான கடற்கரையை அடைந்தான். அங்கு அவன் கனவில் கண்ட காட்ச்சிகளை நிஜமாக பார்த்தான். இதை படம் பிடிக்க முடியவில்லையே என்றெண்ணிக்கொண்டு தன் நண்பனை மனதில் கடிந்து கொண்டான். வீட்டிருக்கு திரும்பி வந்து குளித்து முடித்தான். தொலைகாட்சி பெட்டியை இயக்க, தன்னுடைய வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. சிவா தன்னுடைய வீட்டின் கதவைத் திறக்க, பணம் கொடுக்க வேண்டிய நண்பன் நின்றுகொண்டிருந்தான். அதிசயத்த சிவா வாடா மச்சான், என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கூறி வீட்டினுள் அழைத்தான். சிவா காண்பித்த நாற்காலியில் அமர்ந்த அவன், என்னை மன்னித்துவிடு நண்பா! என்று கண்ணீர் மல்க கூறி, கையில் இருந்த பையினுள்ளே இருந்த எழுபத்தைந்தாயிரம் ரூபாவை சிவாவிடம் கொடுத்தான். என்னுடைய தங்கை இப்பொழுது நலமாக இருக்கிறாள் எல்லாம் நீ செய்த உதவியினால் தான் என்று கூறி அழுதான். அவனை தேற்றி அனுப்பிவைத்து புகைப்பட கருவி வாங்க மகிழ்ச்சியாய் சென்றான் சிவா.

ஜனிக்கிறேன்

திடீர் திருப்பம்!
சாலையில்
மட்டுமல்ல,
என் வாழ்விலும் தான்.
உன்னை பார்த்த அந்நாள்,
மீண்டும் பிறந்தேன்!
பணியில் ஓய்வடைந்து
வாழ்க்கையில் ஓயாமல்
திரும்புகையில்,
இன்றும் நினைக்கிறேன்,
அந்நாளை!
இனி உன் கைகோர்த்து,
மாலை நேரங்களில்
நான் உலா வருவதை
என்னும் பொழுது,
என்னுள்ளம் எங்கோ
பறக்க தான் செய்கிறது!
அதனால் நான் இன்றும்
ஜனிக்கிறேன்!

உனக்கு நான்..

என் பள்ளிபருவத்தின் சாரல் நீயே!
என் பூந்தோட்டத்தின் வாசம் நீயே!
என் தடாகத்தின் தாமரை நீயே!
என் முற்றத்தின் தென்றல் நீயே!
என் தீபவிளக்கின் சுடர் நீயே!
என் ஆருயிரின் சுவாசம் நீயே!
என் வாழ்வின் அனைத்தும் நீயே!
நீயே என்னை ஈன்றாய்....
பத்து மாதம்
என்னை கருவறையில்
சுமந்து,
வலியை பொறுத்து,
நான் இவ்வுலகைப்
பார்த்த நாளில்
என்னை பார்த்து
ரசித்தாயே!
உனக்கு நான் என்றும்
அடிபணிகிறேன்!

குருதி புனல்

அந்தி சாயும் நேரம்
செந்நிற கதிர்கள்
மேற்குப் பக்கம்
தேய்ந்துகொண்டிருக்க,
வானமோ
சிகப்பு கம்பளத்தை
தன் மேலே
போத்திக் கொண்டிருக்க,
நெற்கட்டுகளை
களத்தில் அடித்து
கொண்டிருந்தார்கள்
விவசாய்கள்,
கண்ணாம்பூச்சி
விளையாடும் குழந்தைகளையும்,
சிலம்பமும் கபடியும்
பயிலும் இளைஞ்சர்களையும்,
முற்றத்தில் வாசல் தெளிக்கும்
பெண்களையும்,
ரசித்துக் கொண்டே
சிறிது தூரம்
கடந்த என் கால்கள்,
வேகமாக கண்முன்னே
தெரிந்த வழியில்
சிந்திக்காமால் ஓடி கொண்டிருந்தது!
அப்பொழுது என் மூச்சிரைப்பை
தவிர்க்கவும், தாகம் தணிக்கவும்
அருகிலிருந்த ஓடையில்
முகம் எட்டி பார்க்க
அது இரத்த ஆறு....!
ஐயோ ஏன் இந்த சாதிசண்டை.......

Thursday, December 23, 2010

உண்மை!

தன்னம்பிக்கையாலனின்
பலம்....

என்னை இழந்தேன்.........

சோலையே நீ பாலையானாய்,
உண்மையே நீ பொய் ஆனாய்,
நிஜமே நீ நிழலானாய்,
நீரோடையே நீ கானலானாய்,
பகலே நீ இரவானாய்,
என்னவள் நிஜம் உட்புகுந்ததினால்,
உயிரே நீ மரணமானாய்!!!!!

நம்முடையது

தமிழா.......
நிதானமாயிரு,
கண்முழித்திரு,
விழித்திரு,
படித்திரு,
எதிர்பார்த்திரு,
சரித்திரம் படைத்திரு,
நாளைய தமிழ் ஈழம் நம்முடையது!

காண்பாயா

கவிதை எழுத
காலம் இல்லை!
வரிகள் வடிக்க
வாய்ப்பில்லை!
எழுத்துக்கள் கோர்த்து
ஏங்க தோன்றவில்லை!
உவமை உதிர்க்க
ஊக்கமில்லை!
என்னவளே, ஆனால்
ஏங்குகிறேன் உனக்காக,
எழுத்துக்கள் கோர்த்து,
வரிகள் வடித்து, உவமையுடன்
கவிதை எழுத,
கனிவுடன் என்னை
காண்பாயோ?

Thursday, December 16, 2010

ஈன்றெடுத்த தாயே..............

உனக்கு நானும் சுமையானேன்
உன் கருவறையில்!
உனக்கு என்னமோ,
அது சுகமான சுமை தான்!
கனவுகள் எத்தனை
கண்டிருப்பாய் என்னை வளர்ப்பதற்கு!
நான் வளர்கையில்
என்னை கைகளில் தாங்கமால்,
உன் நெஞ்சினில் தாங்கினாய்!
ஏனோ அதுவும் உனக்கு
பிடித்தும் போனது!
என் மேல் இருக்கும் அன்பு
சிதறக் கூடாது என்பதினால்
தான் என்னோடு நிறுத்திக் கொண்டாயோ!
உனக்கென்று ஆசைகள் இருந்தும்
எனக்காக மறைத்துக் கொண்டாய்!
உன் ஆசைகள் அனைத்தையும்
வெளிச்சத்திற்கு காட்டாமல்,
இருட்டறையில் பூட்டிவிட்டாயே!
வளர்ந்தேன் நான், உன்னால்!
கற்றுக்கொடுத்தாயே எனக்கு
பகுத்தறிவு முதல் பொதுஅறிவு வரை,
விளையாட்டு முதல் வீரம் வரை!
அன்னையாய் மட்டுமல்ல,
ஆசானாகவும் திகழ்ந்தாய்!
இப்பூலோகத்தில் கண்டதில்லை
உன் போல் தாயை!
நீ ஆச்சிரியங்கள்
நிறைந்த பெட்டகம்!
நான் இன்றிருக்கும்
நிலைமையை நினைக்கும்
பொழுது, நீ என்னைவிட
துன்புற்றிருப்பாய் என்று
உணர்கிறேன்!!
மன்னித்துவிடு, என் அன்னையே!
வருத்தத்துடன்,
கல்லறையில் உறங்கும்
உனக்காக
முதியோர் இல்லத்தில் இருந்து உன் மகன்!!

விடுப்பு

ஏமாற்றம் இருக்காது
ஆசைகளுக்கு
விடுப்பு கொடுத்தால்!

Thursday, December 9, 2010

பொய்!!

பயன்தாங்கோளிகளின்
ஆயுதம்.......

பயம்!

தோழமையிடம்
கூட உண்மையை
மறைக்க
சொல்கிறது
மகிழ்ச்சியான பொழுது
வார்த்தைகள் சிதறும்,
கோபமான பொழுதில்
தடுமாறும்!

கேள்விகள்

என்றுமே பதில்
தருவதில்லை,
சில நேரங்களில்
ஆச்சிரியம் மட்டுமே
மிஞ்சும்!!

உள்ளுணர்வு

நம்மை போல் எல்லோரையும்
நினைக்கூடாது,
ஏன் என்றால் நாம் செய்யும்
தவறை
அவர்களும் செய்வார்கள்
என்று நாம் நினைக்கூடும்!!

Tuesday, December 7, 2010

கண்ணீர் அருவி

உன் வீட்டின்னுலே
இருக்கும் பௌண்டைனை
பார்க்கும் பொழுது,
என் கண்ணீர் அருவி
பாய்வது போல் தெரிகிறது!!!

என் கவிதை நோட்டு.....





உன்னைப்பற்றியே

எழுத்துக்கள் பொறித்த என்

காதல் கல்வெட்டு!!

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே

(கோழி கூவுது திரைப்படம் என்று ஒரு தோழி கூறினார்)


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கேட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]

சோலைக்காட்டு மூலையிலே,
ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்திருச்சி
நல்ல சோளமும் விளஞ்சிருச்சி
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்ச்சிருச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு பார்க்க போனேன்,
அதுக்குள் ஓடிப் போச்சிஅண்ணே!
[அண்ணே அண்ணே]

அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
இப்போ அதிகாரம் பண்ணுறாங்க
ஆளுக்குஆளு நாட்டாமை
எங்களை ஆளு வச்சி அடிக்குறாங்க,
ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாங்க
சொல்லுறத நான் சொல்லிபுட்டேன் நான்
செய்யுறதா செஞ்சிபுடுங்க
[அண்ணே அண்ணே]

Monday, September 27, 2010

திசை

தொலைந்த எனக்கு,
வெளிச்சம் தந்து,
வழியைக் காட்டியது!
திசை.

தோல்வி நிலையென

தோல்வி நிலையென நினைத்தால் (படம்-ஊமை விழிகள்)**
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...(2)
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...?

(தோல்வி நிலையென )


விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?


(தோல்வி நிலையென )


விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?

Thursday, August 12, 2010

தவறு

எனக்கு பாடங்களை தருகின்றன..
நிறைய தெரிந்து கொண்டேன்,

எனக்கு அனுபத்தை தருகின்றன
நிறைய கற்று கொண்டேன்,

எனக்கு வெற்றிகளைத் தருகின்றன
அனுபவிக்கிறேன்.

நன்றி

Tuesday, July 13, 2010

நாங்கள்



விடைகளைத் தேடி,

தடுமாறும்

கேள்விகள்

நாங்கள்!



வந்தாரை வாழவைத்து

எங்கள்

தன்மானத்தை இழந்தவர்கள்

நாங்கள்!



எங்கள் தாய்மொழியை

மறந்து, ஆங்கில

மோகத்தில் அலைபவர்கள்

நாங்கள்!



எங்கள் இனம்

அழிய, மகிழ்ச்சியாக

தொலைக்காட்ச்சியில்

எங்களை தொலைத்தவர்கள்,

நாங்கள் தான் திராவிடர்கள்

தமிழர்கள்!!



ஆனால் இது நீடிக்காது...

என்பதே எங்கள் எச்சரிக்கை.

Tuesday, June 15, 2010

WC football 2010 live

http://tvbunch.com/4326/Live-Streams/worldcup2010/Argentina-vs-Germany---Quarterfinals#

Tuesday, March 9, 2010

Monday, February 22, 2010

ஈரம் [சிறுகதை - 4]

சிவா காலையில் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய மனைவி லாவண்யா, காலையில் ஆவி பறக்க தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். சூடான தேநீர் பருக சிவாவிற்கு பிடித்தமான ஒன்று. தேநீர் கோப்பையை கையில் ஏந்தி உதடுகளின் இடையே வைத்து மெல்ல சுவைத்து குடிக்கின்றான். அப்பொழுது வீட்டை யாரோ புதிதாக சுத்தம் செய்து கொண்டிருப்பதை உணர்ந்து அப்பக்கம் பார்வையை திருப்புகின்றான்.

அப்பொழுது சுத்தம் செய்து கொண்டிருப்பது ஒரு புது பணிப்பெண். அவள் பெயர் மீரா. மீரா குனிந்து சுத்தம் செய்யும் பொழுது தன்னுடைய தலைமுடியை ஒதுக்கினாள். அப்பொழுது சிவாவிற்கு அம்முகம் எங்கோ பார்த்த ஞாபகம்! அவளுடைய புடவை சில இடங்களில் கிழிந்திருந்தது. சிவா பார்ப்பதை மீராவும் கவனித்துவிட்டாள். விரைவில் அவ்விடத்தை விட்டு அகன்றாள். ஆனால் சிவாவின் நினைவுகளில்மீரா.

சிவா வேலைக்கு புறப்பட்டான். புறப்படும் முன் மூன்று அல்லது நான்கு முறை மீராவை சற்று உன்னிப்பாகவே நோக்கினான். அவளோ மிகவும் கூனி குருகிபோகின்றாள். விதி தன்னை துரத்துவதை விடவில்லை என்று உணர்ந்தாள். கணவனை இழந்து 7வயது பிள்ளையுடன் எப்படி இந்த உலகத்தில் உத்தமமாக வாழ்வது என்று நினைக்கும் பொழுது அவளுடைய நெஞ்சம் படபடத்தது. வேறு வழில்லை என்று லாவண்யாவிடம் தெரிவிக்கின்றாள். லாவண்யா தன் கணவன் அப்படியெல்லாம் தவறாக பார்க்க மாட்டார் என்று கூறி மீராவிற்கு தைரியம் கூறுகின்றாள். ஆனால் காலை முதல் நடந்ததை கூறும் பொழுது லாவண்யா மிகவும் அவமானப்பட்டாள்.

மாலை 6 மணிக்கு வரவேண்டிய சிவா 4 மணிக்கே வந்தது லாவண்யாவிற்கு சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியது. சிவா சோகத்துடன் நாற்காலியில் அமர்ந்தான். லாவண்யா மீராவை பற்றி சிவாவிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவு செய்து அவன் அருகில் செல்கின்றாள். அப்பொழுது சிவா மீரா மிகவும் துன்பப்படுதுவதாகவும், அவள் தன்னுடைய 7வயது மகனை படிக்க அனுப்பாமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்புவதாகவும் கூறினான். நேற்று வேலை முடித்து வரும் பொழுது அருகில் உள்ள ஒரு சிறிய பணிமனையில் ஒரு விதவைப் பெண் ஒரு சிறுவனை வேலைக்கு சேர்த்ததாகவும் அவள் தான் மீரா என்று கூறுகின்றான். காலையில் அவளை இங்கே பார்த்த பொழுது தான் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தான்.

காலையில் வேலைக்கு செல்லும் பொழுது மீராவின் மகன் காலில் காயம்பட்டு விட்டதாகவும், அதைப் பார்த்ததினால் தனக்கு வேளையில் நாட்டம் இல்லை என்றும் கூறினான். அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்க்கின்றாள் லாவண்யா. சிவாவின் கண்கள் கலங்யிருந்ததை கவனித்தாள். ஒரு நிமிடத்தில் தன் கணவனை தவறாக நினைத்துவிட்டோமே என்று கலங்கி தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்த பொழுது அவளின் கண்கள் கண்ணீர் துளிகளை வழியவிட்டது. சமயலறையில் பாத்திரங்களை துலக்கும் மீராவும் அழுதாள்.

Sunday, February 21, 2010

சமீபத்தில் நெஞ்சை மிகவும் உருக்கிய பாடல்!

தாய் தின்ற மண்ணே...
இது பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசன் புலம்பல்...!

தாய் தின்ற மண்ணே...
பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசன் புலம்பல்...!

நெல்லாடிய நிலமெங்கே...?
சொல்லாடிய அவையெங்கே...?
வில்லாடிய களமெங்கே...?
கல்லாடிய சிலையெங்கே...?

தாய் தின்ற மண்ணே...!!!


கயல் விளையாடும்
வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்...!

காவிரி மலரின்
கடி மணம் தேடி
கருகி முடிந்தது நாசி..!

சிலை வடிமேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..!

ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..!

புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ..?

காற்றைக் குடிக்கும்
தாவரமாகி
காலம் கழிப்பதுவோ..?

மண்டை ஓடுகள்
மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ..?

மன்னன் ஆளுவதோ..?

தாய் தின்ற மண்ணே..!!
தாய் தின்ற மண்ணே..!!


நொறுங்கும் உடல்கள்..
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..

பழம் தின்னும் கிளியோ..
பிணம் தின்னும் கழுகோ..

தூதோ
முன் வினைத் தீதோ..

களங்களும் அதிர
களிறுகள் பிளிர

சோழம் அழைத்துப்
போவாயோ...?

தங்கமே என்னைத்
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே
புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள்
சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே
அழுதிருப்போம்

அதுவரை...
அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையைச் சுற்றும் கோளே...
அழாதே!

என்றோ ஒருநாள் விடியும் என்று
இரவைச் சுமக்கும் நாளே...
அழாதே!

நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி
உறையில் தூங்கும் வாளே...
அழாதே!

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுகும் யாழே...
அழாதே...!

நெல்லாடிய நிலமெங்கே...?
சொல்லாடிய அவையெங்கே...?
வில்லாடிய களமெங்கே...?
கல்லாடிய சிலையெங்கே...?

தாய் தின்ற மண்ணே...!!!
இது பிள்ளையின் கதறல்.
ஒரு பேரரசு புலம்பல்...!

Thursday, February 18, 2010

நீங்கள் எச்சில் இலைகள்

புழுவாக இருங்கள்,
வெய்யிலில் உங்களை
வாட்டி எடுப்பார்கள்!

நீங்கள்
நாயைப் போல்
நன்றியுடன் வாலாட்டி,
அடுத்தவர்களின் காலை
நக்கி தான் பிழைக்க வேண்டும்!

சொட்டுத் தண்ணீர்
கூட கொடுக்காத
மாநில முதல்வர்களுக்கு,
பாலாலும் தேனாலும்
அபிஷேகம் செய்யவேண்டும்!

வந்தாரை வாழவைத்த
தமிழர்கள்,
குனிந்து குனிந்து
கோமணம் இழந்து
அம்மணமாகத் தான் திரியவேண்டும்!

எதிர்த்தால் தேசிய
பாதுகாப்பு சட்டம் பாயும்!
என்னென்றால் அது
தமிழர்களுக்காக மட்டுமே
உருவாக்கப்பட்டது!

இந்தியா என்ற
திருநாட்டில்,
பயன்படுத்தி,
தூக்கிஎரியப்படுகிற,
எச்சில் இலைகள்
தான் தமிழர்கள்!

Tuesday, February 16, 2010

ஆடிய கால் ஓயாது [சிறுகதை - 3]

பரசுராமுக்கு நகர வாழ்க்கை வித்தியாசமாய் இருந்தது. சென்ற வாரம் தான் தன்னுடைய மகன் பரசுவை நகரத்திருக்கு அழைத்து வந்தான். சும்மா உட்கார்ந்து கொண்டு இருப்பது பரசுவிற்கு பிடிக்காது. காலை பால் வாங்க 5:30 மணிக்கு சென்றுவிடுவார். மருமகளுடன் பாலை கொடுத்துவிட்டு சிறிது தூரம் கால்நடையாக செல்வார். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு செய்தித்தாளை படித்த முடித்த சில நேரங்களில் அவனுடைய மருமகள் சரியாக 11 மணிக்கு தேநீர் கொடுப்பாள். தேநீர் அருந்திய பிறகு ஒரு குட்டித் தூக்கம். பிறகு மதிய உணவு 1:30 மணிக்கு உட்கொள்ளும் பொழுது தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பார். பிறகு ஒரு குட்டி தூக்கம். மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி அந்த நகரை ஒரு சுற்று நடந்து வருவதை நகரத்திருக்கு வந்த ஒரு வாரமாக செய்து கொண்டிருகின்றார். அப்பொழுது அந்த நகரில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு திடலில் வாலிபர்கள் வலைப் பந்து (volley ball)விளையாடி கொண்டிருந்தனர். பெரும்பாலான விளையாட்டு விதிகள் பரசுவிற்கு தெரியும், சில விளையாட்டுகள் விளையாடவும்செய்தார்.

வலைப் பந்து அவருக்கு சுமார விளையாட தெரிந்ததால் தினமும் அதை காணும் ஆவலில் அங்கே வந்து விடுவார். அன்றும் அதே போல் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அன்று விளையாடும் வாலிபர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டது. பரசு தினமும் வேடிக்கைப் பார்ப்பது அவர்களுக்கு தெரியும், அதனால் அன்று பரசுவை விளையாட அழைத்தனர். அவருக்கும் விளையாடும் ஆசை இருந்ததால் விளையாடினார். வயது கடந்த காரணத்தால் அவரால் முன்பு போல் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் அந்த வாலிபர்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள். எப்பொழுதும் வீடிற்கு 6 மணி அளவில் நுழைந்துவிடும் மாமனார் அன்று விளையாடியதால் வராத காரணத்தால் மருமகள் சற்று பயந்து விட்டாள்.

அன்று பரசுவோ நேரம் சென்று கொண்டிருப்பதை மறந்து, அந்த வாலிபர்களிடம் தனது சிறுவயது விளையாட்டு அன்புவங்களை பகிர்ந்துகொண்டார். வாலிபர்களோ தினமும் அவரை விளையாட அழைத்தனர். மேலும் அவர்கள் கல்லூரி விடுமுறை நெருங்குவதால் இரண்டு நாட்களுக்கு பிறகு காலை பொழுதிலும் விளையாடுவதாக தெரிவித்தனர் மற்றும் பரசுவையும் அழைத்தனர். நகரத்திற்கு வந்த ஒருவாரத்தில் அன்று தான் பரசு மகிழ்ச்சியாக வீட்டினுள் நுழைத்தார்.

நுழையும் பொழுது தன மகன் வந்திருப்பைதைப் பார்த்தார். அப்பொழுது தான் அவர் நேரம் நிச்சயமாக 8ஐ கடந்திருக்கும் என்று உணர்ந்தார். தந்தை மிகவும் வியர்வை வழிந்தும், அழுக்காகவும் வருவதைக் கண்ட மகன் தந்து தந்தையை இந்த வயதுக்கு மேல் விளையாட்டு தேவையா என்று கேட்டு கடிந்து கொண்டான். அப்பொழுது பரசுவிற்கு சுருக்கென்றது. மகன் கடிந்த்கொண்டானே என்ற வருத்தம் இருந்தாலும் அவனுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் குறைவு என்று அவருக்கு தெரிந்ததால் அவர் அதைப் பற்றி பெரிதும் கவலைப்படவில்லை. இருந்தாலும் சிருவருத்தம் இருந்தது.

ஆனால் பரசுராமோ தினமும் விளையாடிவிட்டு அவரின் மகன் வருவதற்குள் வீடு திரும்பினார். திடலில் விளையாடும் வாலிபர்களுக்கு கல்லூரி விடுமுறை; ஆதலால் காலை 6:30 மணி முதல் 8 மணி வரை விளையாடுவார்கள். பரசுவோ காலை விரைவில் எழுந்து பால் வாங்கி வீட்டில் வைத்து விட்டு 6:45 மணிக்கெல்லாம் விளையாட சென்று விடுவார்.

ஒரு நாள் 7 மணிக்கெல்லாம் வீடு வருகிறார். அன்று அவருடைய மகன் எதார்த்தமாக வீட்டிற்கு வெளியே வர உடம்பில் இரத்தத்துடன் வரும் தந்தையைப் பார்க்கிறான். அவனின் கோபம் அதிகரித்தது. தன்னுடைய தந்தையைப் பார்த்துகடுமையாக திட்டுகிறான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதைப் பார்கின்றார்கள். அதனால் மிகவும் அவமானப்படுகிறார் பரசு.

தானும் தனது மனைவியும் மகனை எப்படி வளர்த்தனர் என்று அந்த நேரத்தில் நினைவு கொள்கிறான். தன் மனைவி அவரைப் பிறந்ததை எண்ணி மிகவும் வருந்துகிறார்.

அப்பொழுது தான் ஒரு வாலிபனை 5 நபர்கள் இழுத்து வருகின்றனர். அவன் கையில் ஒரு பை இருந்தது.

அந்த வாலிபன் ஒரு திருடன். பரசு பால் வாங்கிவிட்டு திரும்பி வந்து வீட்டு சமையலறைக்குள் வைக்கும் பொழுது சப்தம் கேட்டு கொல்லை பக்கம் சென்றுப் பார்க்கும் பொழுது ஒருவன் ஒரு பையுடன் வீட்டு மதில் சுவரை தாண்டி ஓடினான். அவனை துரத்தி சென்று பிடிக்கும் முயற்ச்சியில் தான் அவருக்கு காயம் ஏற்ப்பட்டது. இருந்தாலும் விடாமல் துரத்தும் பொழுது அவன் விளையாட்டு திடலுக்குள் செல்ல அங்கே இவருடன் வில்லையாடும் வாலிபர்கள் அந்தத் திருடனை மடக்கிப் பிடித்தனர். அந்தத் திருடனை அங்கே இழுத்துவந்தனர்.

அந்தப் பையைப் திறந்து பார்க்கும் பொழுது அதனுள் அவர் மகனுடைய மடிக்கணினி இருந்தது. மகன் அதைப் பார்த்தவுடன் உறைந்துப் போகின்றான். அதனுள் அலுவக ரகசியங்கள் நிறையவே அடங்கயுள்ளது என்பது அவனுக்கு தெரியும். மேலும் அது தொலைந்து விட்டால் இவனுடைய வேலை போய்விடும் என்பதும் அவனுக்குதெரியும்.

தன் தந்தை இந்த வயதிலும் துணிந்து ஒரு திருடனை பிடிக்கிறார் என்றால் அவருடைய ஆரோக்கியத்திருக்கு காரணம் விளையாட்டு தான் என்று உணர்ந்து மிகவும் வருந்தி தன் தந்தையிடம் மன்னிப்பு கோருகிறான்.

Friday, February 12, 2010

சுகமான சுமை

உன்னை தோளில்
சுமந்தால் உனக்கு
வலிக்கும் என்பதால்,
உன் நினைவுகளை
என் நெஞ்சில் சுமந்தேன்!

Wednesday, February 3, 2010

எங்களை ஒடுக்குங்கள்

நாங்கள் கேட்கமாட்டோம்
என்று எங்கள் சிறார்களை
கொன்று ஒழிதீர்கள்....
எங்களை ஒடுக்குங்கள்!

நாங்கள் ஊமைகள்
என்று எங்கள் சகோதரிகளை
மானபங்கம் செய்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!

நாங்கள் பாவிகள்
என்று எங்கள் பாடசாலைகளையும்,
மருத்துமனைகளையும் அழித்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!

எங்களுக்குகாக போராடிய
போராளிகளின் இறந்த உடல்களை
அவமானம் செய்தீர்கள்..
எங்களை ஒடுக்குங்கள்!

ஓடிய கால்கள் ஒரு நாள் நிற்கும்,
ஊமையாய் இருக்கும் நாக்கு ஒரு நாள் உறுமும்,
பணிந்த கைகள் ஒரு நாள் சேரும்,
எங்கள் பலம் உமக்குத் தெரியும்
அது வரை நீங்கள் எங்களை ஒடுக்குங்கள்!!

குடும்பத்திற்காக [சிறுகதை-2]


வாசலில் தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருகின்றாள் மாலதி. அவள் வயது அப்பொழுது 11. மிகச் சாதரணமாக எல்லோரையும் போல பள்ளிகூடத்திருக்கு சென்று கொண்டிருந்தாள். மாலை பொழுது பள்ளியிலிருந்து திரும்பி வரும் மாலதி புரட்சி கவி பாரதி கூறியது போல் மாலை முழுவதும் விளையாடி விட்டு, வீட்டிருக்கு திரும்பி குளித்துவிட்டு தன் வகுப்பு ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடங்களை முடித்து விட்டு இரவு உணவு அருந்தி விட்டு மிக சுகமான தூங்குவாள்.

காலையில் எழும்பி முந்தய நாள் வகுப்பில் நடத்திய பாடங்களை படித்து விட்டு பள்ளிக்கு செல்வாள். அவள் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தாள். தன் குடும்பத்துடனும் தன் தோழிகளுடன் மகிழ்ச்சியாய் இருந்தாள்.

அந்த நாள் அவள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள். அந்த கருப்பு நாள் என்றுமே அவள் மனதில் நீங்கா சோகத்தைக் கொடுத்தது.

அன்று அவள் பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த பொழுது அவள் கண்ட காட்சி, அவளின் அம்மாவும் அக்காவும் அவளின் கண் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். அவளின் தந்தையோ கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அங்கே பத்து பேர் கேலியாக அவளுக்கு தெரியாத மொழியில் பேசி சிரித்துக் கொண்டிருக்க, இருவர் இவளின் சொந்தங்களின் கற்புடன் விளையாடி கொண்டிருந்தார்கள். இருவர் இவளைப் பார்த்து திரும்ப முயற்சிக்கும் முன் அலறிக்கொண்டு சிட்டாக பறக்கின்றாள் மாலதி.

அவள் தோழிகளுடன் விளையாடிய தெருவில் உயிருக்கு அஞ்சி ஓடிகொண்டிருக்கின்றாள். ஓடும் பொழுது அவள் துரத்தப்படுகின்றாளா என்று பார்த்து கொண்டே ஓடுகின்றாள். ஒரு சமயத்தில் பின்னால் யாரும் வரவில்லை என்று தெரிந்தவுடன் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு மறைவான இடம் தேடி அமர்கின்றாள். அவளது மரண பயம் இன்னமும் போகவில்லை என்று அவளின் முகத்தில் தெரிகிறது. அவளுடைய மூச்சிறைப்பு மட்டும் நிற்கவில்லை. வெகு தூரம் ஓடி வந்ததால் களைப்பும், தாகமும் அவளை வாட்டியது. பக்கத்தில் ஓடிய நீரோடையில் மாலதி தாகம் தனிக்கின்றாள்.

அப்பொழுது மீண்டும் அவளின் சிந்தனையில் அவள் கண்ட துயர நிகழ்ச்சி நினைவில் தோன்ற அம்மா என்று அலறியவளுக்கு அவள் வார்த்தை அவளின் காதில் விழவில்லை. ஆனால் அவள் நீரோடையின் ஓசையையும், இலைகள் அசையும் ஒலியையும் கேட்க முடிகிறது. அப்பொழுது தான், பேசும் திறனை இழந்தது அவளுக்கு தெரியவந்தது. ஆம் அந்த காட்சியை கண்ட மாலதி பேசாமடந்தை ஆனாள்.

என்ன செய்வதென்றே தெரியாமல் அவள் வாழ்க்கை இருட்டு ஆகிவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தாள். அவளின் வீட்டில் தான் அக மகிழ்ந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது அவள் நினைவில் தன் குடும்பத்தை சிதைத்த முகங்கள் தோன்றுகின்றது. மிகுந்த கோபத்துடன் தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது, அவளின் தோளை ஒரு கை பற்றுகிறது.

தன்னை துரத்தியவனோ என்ற அச்சத்துடன் திரும்புகிறாள். ஆனால் அவள் ஒரு பெண். அவனைப் போலவே உடை அணிந்திருந்தாள். மேலும் பீதி மாலதியை பற்றிக்கொண்டது. யாரம்மா நீ என்று அந்த பெண் மாலதியின் தாய் மொழியில் வினா எழுப்ப, பதில் கூற இயலாமல் தன் நிலைமையை சைகையில் விளக்கி கண்ணீர் வடிகின்றாள். ஆனால் உள்ளுக்குள் தனக்கு ஒரு துணை கிடைத்தது என்ற மகிழ்ச்சியுடன் அவளின் கையை பற்றிகொள்கிறாள்.

தன்னை ஒரு சகோதரிப் போல் பாவிக்கும் அவளின் பெயர் என்னவென்று தெரிந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மாலதிக்கு இருந்தது. இரவு முழுவதும் பற்றிய கரத்தை மாலதி விடவில்லை. விடியும் பொழுது இருவரும் ஒரு இல்லத்தில் நுழைகின்றனர்.

அங்கே நிறைய சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப் பார்ப்பதற்கு ஒரு வகுப்பறைப் போன்று தெரிந்தது. பிறகு மாலதி அந்தப் பெண்ணிடம் நடந்தது அனைத்தையும் எழுதி காண்பித்து அழுதுதாள். அனைத்தையும் புரிந்துக் கொண்டு மாலதியை அந்தப் பெண் அரவணைத்தாள். அந்த அரவணைப்பு தன் தாயிடம் இருப்பதை போல் உணர்ந்தாள் மாலதி.

அதே இடத்தில் தனது 16 வயதைக் கடந்தாள் மாலதி. ஆனால் தன் குடும்பம் சிதைந்து போனது மட்டும் அவள் மனதில் மாறாத வடுவாக இருந்தது. மாலதிக்கு தன் இனத்தின் வரலாறுகள் அங்கே கற்றுக்கொடுக்கப்பட்டது. தன் இனம் பட்ட காயங்கள், வலிகள், அவமானங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாள் மாலதி. தன் இன விடிவுக்கான போராட்டத்தையும் அறிந்துகொண்டு அவளும் தன்னை அர்ப்பணிப்பது தான் சிறந்தது என்றும் முடிவு செய்கின்றாள்.

அப்பொழுது தான் அவளின் குடும்பத்தைக் சிதைத்த இராணுவ தளபதி பற்றி தகவலை சேகரித்தாள். அப்பொழுது அந்த தளபதியை பழி வாங்க அவர்களின் இயக்கத்தில் திட்டம் தீட்டிகொண்டிருப்பதை அறிந்தாள். அவள் தன்னுடைய ஆசையை வெளிபடுத்த, திட்டங்கள் முழுவதும் அவளுக்கு கூறப்பட்டது.

இந்த தருணத்தை முழுவதும் பயன்ப்படுத்தி கொள்ள முடிவு செய்தாள். அதை செயல்படுத்த அவள் தன்னை தயார் செய்து கொண்டாள். திட்டமிட்டபடி மாலதி அந்த தளபதி நோக்கி புறப்பட்டு சென்றாள். போகும் வழியில் பல தடைகள் கடந்து தன்னுடைய இலக்கு நோக்கிச் சென்றாள். திட்டமிட்டபடி அந்த தளபதியின் வாகனம் மீது குதித்து, தன் குடும்பத்தாரை மனதில் நினைத்து கையில் வைத்திருந்த இயக்கியை இயக்கி வெடித்துசிதறினாள். அவளுடன் அந்த கொடூர தளபதியும் கருகி இறந்தான்.

தன் குடுப்பம் சிதைந்து போனதற்கு காரணமான தளபதியை கொன்றோம் என்ற மன நிம்மதியுடன் அவளுது ஆத்மா பிரிகின்றது. அவள் ஒரு மாவீரர் ஆனாள். இனத்திற்காக தன்னை அர்ப்பணித்தால் இன்று அவளது குழு அவள் புகைப்படம் முன் நின்று மௌன அஞ்சலி தெரிவித்தது.

வெறுமை

வசந்தம் என்பது
கனவில் மட்டும் தான்,
ஏமாற்றும் அரசியல்
சூறாவளிகள் இருக்கும் வரை!

தென்றல் என்பது
வார்த்தையில் மட்டும் தான்,
அமிலத்தை காற்றில் கலக்கும்
பட்டறைகள் இருக்கும் வரை!

படிப்பு என்பது
பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான்
சமச்சீர் கல்வி
வரும் வரை!

தமிழக மக்களுக்கு
வாழ்க்கை என்பது
வெறுமை மட்டும் தான்
இலவச வண்ண தொலைக்காட்சி
மற்றும் ஒரு ரூபாய் அரிசி
உள்ள வரை!

காதல்

ஒரு கானல்நீர்
ஏமாறும்
மான்களுக்கு!

Tuesday, February 2, 2010

சிகரெட் பெட்டி





கைக்கு அடக்கமான

பெட்டி,

இறுதியில் உன்னை

அதனுள் அடக்கும்

சவப்பெட்டி!

வாழத்தான் வேண்டும் [சிறுகதை-1]

காலை ஆறு மணி முதலே அவனது மனம் சரியில்லை. எதிலுமே நாட்டம் இல்லாத அவனது செயல்களை, வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காமல் இல்லை. அவனுடைய நடைவடிக்கைகளை கண்ட அவனது தந்தை குழப்பம் அடைந்தாரே தவிர காரணத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. பத்து மணிக்கு அவன் சிற்றுண்டி அருந்தாமல் வெளியில் செல்வது அவருக்கு புதிதாக இருந்தது. குடும்பத்தாருக்கோ குழப்பம் மேலும் அதிகரித்தது.

நாளிதழை மடித்துவிட்டு, அவனுடைய நண்பர்களிடம் தொலைப்பேசி வாயிலாக தன் மகனைப் பற்றி விவாதிக்கின்றார். நண்பர்கள் அவனை சந்தித்து மூன்று நாட்கள் கடந்து விட்டது என்று தெரியவர அவருக்கு மேலும் அதிர்ச்சி அதிகரிக்கின்றது. ஒன்றுமே புரியாமல் அவனது தந்தை நொந்தபடி நாற்காலியில் சாயிந்து உட்கார்ந்து கண்களை மூடி தன் மகனைப் பற்றி சிந்திக்கின்றார்.

அவனோ மனதில் ஏதோ பாரத்தை சுமந்து கொண்டு கால் போன பாதையில் சென்று கொண்டிருக்கின்றான். வழியில் ஒரு கடையில் ஒரு வெண்சுருட்டு வாங்கி பற்ற வைத்து புகைக்கும் பொழுது அவனது கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றது. அவனது கண்கள் கலங்கி கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்க்கின்றன.

அவன் புகைப்பிடித்தபடி தனது கற்பனை குதிரைகளை ஓடவிட்டான். அவனது நெஞ்சில் முதல் நாள் பார்த்த செய்திகளின் தொகுப்பு ஆழமாய் பதிந்துவிட அதை மீண்டும் ஒரு முறை நினைக்கும் பொழுது, முன்னைவிட இப்பொழுது இன்னமும் வேகமாய் புகைப் பிடிக்கின்றான். ஒரு வெள்ளைத் தாள் காசு கொடுத்து வாங்குகின்றான்.

சூரியன் தனது செங்கதிர்களை வானத்தில் சிதறவிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்க, வாசலை நோக்கியே அவனது தந்தையின் பார்வை அவனை எதிர்பார்த்து நிலைத்திருக்கின்றது. மதிய உணவு உண்ணாமல் அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் முகம் தெளிவாக கூறுகின்றது.

ஆனால் அவனோ, மடித்து வைத்த வெள்ளைத் தாளை தனது சட்டைப்பையில் இருந்து மீண்டும் ஒரு முறை எடுத்துப் பார்க்கிறான். தான் எழுதியது சரியாக இருக்கின்றதா என்று ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு தனது நடையை தொடர்கிறான். நீண்ட தூரம் அவன் கடந்து வந்துவிட்டான் என்பதை அவனது கால்கள் உணர்த்துகின்றது.காலையிலருந்து உணவருந்தாமல் நடந்த அவன் ஓரிடத்தில் அமர்கின்றான்.

அவனது தந்தையோ கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து முன்னால் நிற்கின்றார். அப்பொழுது அவனது ஐந்து நண்பர்களும் அங்கு வந்து சேர்கின்றார்கள். அவர்களிடமிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் கிடைக்கும் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

இரவு ஒன்பது மணி வரை ஒரு தகவலும் தெரியாத காரணத்தால் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை பதிவு செய்யலாம் என்று நினைத்த அவர் விடியும் வரைக் காத்திருக்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் நாற்காலியில் அமர்கிறார்.

காலையில் நாளிதழை படித்துகொண்டிருக்கும் பொழுது அவர் படித்த செய்தி தலையில் இடி பாய்ந்தது போல் உணர்கிறார். அவருக்கு ஏதோ உள்ளுக்குள் தோன்ற அவசரமாய் புறப்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் செல்கிறார். அங்கே அவர் கண்ட காட்சி அவரின் நெஞ்சத்தை இறுக்கியது போல் இருந்தது. தனது மகன் மாவட்ட ஆட்சியாளர் அலுவகத்தின் பின்புறம் இருக்கும் மரத்தில் தன்னைத்தானே மாய்த்து கொண்டான். அவருக்கு கண்கள் இருண்டது, பூமி சுற்றியது, மெல்ல அவர் கீழே சாயும் முன் அவனது நண்பர்கள் அவனது தந்தையை தாங்கி பிடித்தனர்.

அவரை தேற்றி இல்லத்திருக்கு அழைத்து வந்து உள்ளே நுழையும் முன், பதிவு தாபால் ஒன்று வருகின்றது. பிரித்தால் அது அவரது அன்பு மகனின் கடிதம். தமிழீழ விடுதலைப் போரில் மாண்ட தமிழ் சொந்தங்களுக்காக தன் இன்னுயிரை துறந்திருக்கின்றான் என்று அறிந்து கொள்கிறார். தமிழர்களுக்காக தன் புதல்வன் இந்த உயிர்த்தியாகம் செய்துள்ளான் என்பதை நினைத்து பெருமைக் கொண்டாலும் அவனையே நம்பியிருந்த குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்திவிட்டான் என்று அவர் மனம் வலிக்கத்தான் செய்தது. இரண்டு நாள் கழித்து பாரத்துடன் கூலி வேலை தேடி தந்தை புறப்படுகின்றார்.

அவர் கண்கள் மட்டுமல்ல அவர் இதயமும் கலங்கி தான் போயிருந்தது.

இது அகலுமா?

விதைத்தது
விவகாரமாய்
விளைந்து
விகாரமானது
ஜாதிக்காய் !!